பாரா ஒலிம்பிக்குடன் திருநங்கைகளுக்கும் ஒலிம்பிக் போட்டி : லயோலா கல்லூரி விழாவில் வலியுறுத்தல்

சென்னை திருநங்கைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும் என்று சென்னை லயோலா கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் வலியுறுத்தினர்.

புதிய பாதையில் திருநங்கைகள் Trans Olympic 2020 என்ற நிகழ்ச்சி சென்னை லயோலா கல்லூரியில் நேற்று (14-03-2020) நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருநங்கைகள் நலனுக்காக செயல்படும் பல்வேறு அமைப்புகள், காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

லயோலா கல்லூரியின் முதல்வர் முனைவர் தாமஸ், செயலாளர் முனைவர் சே. ச. செல்வநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்சித் தகவலியல் துறை தலைவர் டாக்டர் சின்னப்பன் அறிமுக உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியில் லயோலா கல்லூரியின் முதல்வர், பேராசிரியர்கள் பேசும்பொழுது, “விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் ஒலிம்பிக், மாற்று திறனாளிகள் வீரர்கள் பங்கேற்கும் ‘பாரா ஒலிம்பிக்‘ போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில் விளையாட்டு வீரர்களாக ஜொலிக்கும் திருநங்கைகள் பங்கேற்கும் ஒரு ஒலிம்பிக் போட்டியை நடத்த வேண்டும். பாரா ஒலிம்பிக் போட்டியுடன் இணைந்து திருநங்கைகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டியையும் நடத்தலாம்.” என்று வலியுறுத்தினர்.

விழாவில் கலந்து கொண்டவர்கள் இதனை வரவேற்றனர்.

உலக விளையாட்டு வீரர்கள் மிகப் பெரிய மதிப்பு வாய்ந்ததாக கருதுவது ஒலிம்பிக் போட்டிகளைத்தான். அதற்கு காரணம், உலகம் கொண்டாடும் அணி விளையாட்டான கால்பந்து முதல் உலகின் பிரபல தனிநபர் விளையாட்டான டென்னிஸ் வரை முக்கிய விளையாட்டுகள் ஒலிம்பிக்கில் இடம்பெற்றிருப்பதும், போட்டிகளில் கடைபிடிக்கப்படும் தரக்கட்டுப்பாடுகளும்தான். இந்நிலையில் லயோலா கல்லூரியின் இந்த கோரிக்கையை வரவேற்கத்தக்கது என்று அவர்கள் குறிப்பிட்டனார்.

இதன் முன்னோட்டமாக திருநங்கைகள் மட்டும் பங்கேற்கும் விளையாட்டுப் போட்டிகளை லயோலாக் கல்லூரி நடத்துவதாக அறிவித்தது. சவுந்தர்யா, நான்சி, கார்த்திகை, சிவஸ்ரீ, ஸ்ரீஜாஆகிய 5 திருநங்கைகள் இந்த விளையாட்டுப் போட்டிக்காக தயாராக உள்ளனர்.

தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை கிழக்கு காவல் இணை ஆணையர் சுதாகர் ஐபிஎஸ், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர்செயலர் மற்றும் மாவட்ட நீதிபதி கே. ராஜசேகர், தமிழக சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை முதன்மை செயலாளர் மதுமதி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க இணை இயக்குனர் டாக்டர் மணிமாறன் உள்பட பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு உரையாற்றினார்.

பிரபல புகைப்பட கலைஞர் முனைவர் இராமச்சந்திரன் திருநங்கைகளின் கோலப்போட்டி மற்றும் ஓவியப் போட்டிக்கு நடுவராக பங்கேற்றிருந்தார். நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் திருநங்கைகளின் கோலப்போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

திருநங்கைகள் மட்டுமே பங்கேற்ற சிறப்பு பட்டிமன்றத்தின் நடுவராக திருநங்கை கலைமாமணி சுதா பங்கேற்று நடத்தினார். கோலப் போட்டி, ஓவியப்போட்டி மற்றும் ஒலிம்பிக்கில் 5 பேரை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சூளைமேடு காவல்துறை ஆய்வாளர் ஆனந்த்பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார்.

திருநங்கைகள் ரூபகலா மற்றும் மோகனா பிரபாவிற்கு சுயதொழில் செய்வதற்கான உபகரணங்கள் சூளைமேடு காவல் நிலையத்தின் மூலம் வழங்கப்பட்டது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *