நீட் தேர்வு முடிவு வெளியீட்டில் குளறுபடிகள் : மாறிப்போன விடைத்தாள்கள் – மாணவர்கள் புகார்

மருத்துவ படிப்பில் சேர்வ தற்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவு வெளியீட்டில் பல குளறுபடிகள் நடந்துள்ளதாக தேர்வை எழுதிய மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் பேர் எழுதிய நீட் நுழைவுக் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியானது. இதில் 7 லட்சத்து 71 ஆயிரத்து 500 பேர் (56.44 விழக்காடு) பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த முடிவுகளோடு மாநிலங்களில் தேர்வெழுத விண்ணப்பத்திவர்கள், தேர்வில் கலந்து கொண்டவர்கள், வெற்றிபெற்றவர்கள் தொடர்பான புள்ளிவிவரப் பட்டியலையும் தேசிய தேர்வு முகமை வெளியிட்டிருந்தது.

அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது ஆதரப்பூர்வமான அம்பலமானது. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் விகிதம் மற்றும் எண்ணிக்கையில் மிகப்பெரிய வித்தியாசங்கள் இருந்தது தெரியவந்தது.

குறிப்பாக திரிபுராவில் 3 ஆயிரத்து 536 பேர் தேர்வு எழுதிய நிலையில், 88 ஆயிரத்து 889 பேர் தேர்ச்சி பெற்றதாக நீட் தேர்வு முடிவுகள் பட்டியலில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் தேர்வு எழுதியவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 47ஆக இருக்கும்போது தேர்ச்சி பெற்றவர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 307 அறிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் தெலுங்கானா மாநிலத்தில் 50 ஆயிரத்து 392 பேர் தேர்வு எழுதிய நிலையில் வெறும் 7 ஆயிரத்து 323 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக குறிப்பிட்டுவிட்டு தேர்ச்சி விகிதம் 60.79 விழுக்காடு என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேபோன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1 லட்சத்து 56 ஆயிரத்து 992 பேர் தேர்வு எழுதி 7 ஆயிரத்து 323 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், தேர்ச்சி விகிதம் 60.79 விழுக்காடு என குறிப்பிடப்பட்டிருந்தது. இதேபோல் மற்ற மாநிலங்களில் தேர்ச்சி விகிதத்தை கணக்கிட்டால் மேலும் பல குளறுபடிகள் தெரியவரும் என கல்வியாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நீட் தேர்வு முடிவுகள் தொடர்பான குளறுபடி புகாரைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய அறிக்கையை இணையதளத்திலிருந்து தேசிய தேர்வு முகமை நீக்கியது.

இந்நிலையில் நீட் விடைத்தாள் மதிப்பீட்டில் பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் கூறும்போது, நீட் தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பை தேசிய தேர்வு முகமை கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி வெளியிட்டது. இதன் மூலம் மாணவர்கள் தாங்கள் எழுதிய விடைகளை சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து விடைக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு நீட் தேர்வில் எங்களுக்கான உத்தேச மதிப்பெண் எவ்வளவு கிடைக்கும் என கணக்கிட்டிருந்தோம்.

இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. அப்போது, இணையதளத்தில் எங்களது மதிப்பெண்களைப் பார்த்ததும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. ஏனெனில், விடைக்குறிப்பின் அடிப்படையில் நாங்கள் கணக்கிட்டிருந்த மதிப்பெண்ணுக்கும், நீட் தேர்வு முடிவுகளில் அறிவிக்கப்பட்டிருந்த மதிப்பெண்ணுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருந்தது.

விடைக்குறிப்பில் உள்ள விடைகளையே எழுதியிருந்த நிலையில் கூட, அதற்கான மதிப்பெண்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. 720க்கு 550 மதிப்பெண் எதிர்பார்த்த நிலையில் 300க்கும் குறைவான மதிப்பெண்களும், 400 மதிப்பெண்ணுக்கும் அதிகமாக கிடைக்கும் என நினைத்திருந்த மாணவர்களுக்கு அதில் பாதி மதிப்பெண்கள் கூட கிடைக்கவில்லை. பின்னர் எந்த அடிப்படையில் விடைக்குறிப்பு வெளியிடப்பட்டது எனத் தெரியவில்லை.

விடைக்குறிப்பில் உள்ள விடைகளையே தேர்விலும் எழுதியிருந்த நிலையில், தற்போது எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதது ஏமாற்றமளிக்கிறது. இது குறித்து தேசிய தேர்வு முகமைக்கு மின்னஞ்சலில் ஆயிரக்கணக்கானோர் புகார்களை அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தனர்.

இது ஒருபுறமிருக்க நீட் தேர்வு முடிவுகளில் ஒஎம்ஆர் விடைத்தாள்கள் தன்னுடையது இல்லை என கோவையைச் சேர்ந்த மனோஜ் என்ற மாணவர் புகார் அளித்துள்ளார். அதேபோல் தான் ஷேடோ செய்த ஒம்எம்ஆர் தாளில் சந்தேகம் உள்ளதாகவும், தான் எழுதிய விடைத்தாளின் உண்மை நகல் வேண்டும் என அரியலூரைச் சேர்ந்த மாணவி மஞ்சு கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அந்த மாணவி செய்தியாளர்களிடம் கூறும்போது, “நீட் தேர்வில் மூன்று வினாக்களுக்கு மட்டுமே நான் பதில் எழுதவில்லை 680 மதிப்பெண்கள் கிடைக்கும் என நான் எதிர்பார்த்த நிலையில் வெறும் 37 மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

இவர் இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தன்னை தயார் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்த அவரது தாய், தனது வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்தபடியே இணைய உதவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலவகைகளிலும் தன் மகளுக்கு உதவி புரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு நாகை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள ஒரு பள்ளியில் அந்த மாணவி தேர்வு எழுதியுள்ளார் இந்நிலையில் நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது அந்த மாணவி 37 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளார்.

இதனால் தன்னுடைய ஒஎம்ஆர் தாளில் குளறுபடி செய்து பேப்பரை மாற்றியிருக்கலாமோ என்று புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் எழுதிய ஒஎம்ஆர் தாளில் அசலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *