சாகடிக்கப்படும் நொய்யல் ஆறு…

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கன உலோகங்கள் மற்றும் வேதிப் பொருட்கள் கலப்பால் நொய்யல் ஆறு மாசடைந்துள்ளது பாரதியார் பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் உருவாகி திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் வழியாக பயணித்து காவிரியுடன் கலக்கிறது நொய்யல் ஆறு. இந்த ஆற்று நீரால் சுமார் 36 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழித்தடத்தில் உள்ள ஏரிகள், குளங்களுக்கும் நொய்யல் ஆற்று நீரே ஆதாரம். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நொய்யல் ஆற்றில் கழிவுகள் கலந்து சீர்கேட்டை ஏற்படுத்திவருகிறது.

இதை உறுதிப்படுத்தும் விதமாக கோவை பாரதியார் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் டி.முரளிசங்கர், சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் எம்.முனியசாமி, ஆராய்ச்சி மாணவி வி.காயத்ரி, பாரதிதாசன் பல்கலைக்கழக கடல்சார் அறிவியல் துறை பேராசிரியர்கள் ஆர்.ராஜாராம், பி.சந்தானம் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வின் முடிவு அமைந்துள்ளது.

இந்த ஆய்வுக்காக நொய்யல் ஆற்றின் நீர் மாதிரிகள், ஆற்றில் வாழும் நண்டுகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கன உலோகங்களின் அளவு அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக பேராசிரியர் டி.முரளிசங்கர் கூறியதாவது: அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையின் (யுஎஸ்இபிஏ) தரத்தின்படி ஒரு லிட்டர் நீரில் 0.5மில்லி கிராம் இருக்க வேண்டிய துத்தநாகம் 2.75 மில்லிகிராமும், 0.05 மில்லிகிராம் இருக்க வேண்டிய காரியம் 10.74 மில்லிகிராமும், இந்திய தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) தரத்தின்படி 250 மில்லிகிராம் இருக்க வேண்டிய குளோரைடு 1,010 மில்லி கிராமும், 45 மில்லிகிராம் இருக்க வேண்டிய நைட்ரேட் 250 மில்லி கிராமும், 200 மில்லிகிராம் இருக்க வேண்டிய நீரின் கடினத்தன்மை 1,075 மில்லிகிராமும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

நண்டுகளின் உடலில் உலோகங்கள்:

ஆற்றில் வசிக்கும் நண்டுகளின் உடலில் கன உலோகங்கள் இருக்கிறதா என ஆய்வு மேற்கொண்டதில் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் (எஃப்ஏஓ) தரத்தின்படி ஒரு கிலோ கிராமில் 30 மில்லிகிராம் இருக்க வேண்டிய துத்தநாகம் 51.72 மில்லி கிராமும், 0.05 மில்லிகிராம் இருக்க வேண்டிய காட்மியம் 0.22 மில்லிகிராமும், 0.5 மில்லிகிராம் இருக்க வேண்டிய காரியம் 19.91 மில்லிகிராமும் இருப்பது தெரியவந்துள்ளது.

எனவே, நொய்யல் ஆற்றில் எந்தெந்த இடங்களில் கழிவுகள் கலக்கிறது என்பதை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரே காலநிலையில் 3 முறை எடுக்கப்பட்ட மாதிரியின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு கிடைத்துள்ளது. பல்வேறு காலங்களில் பல மாதிரிகளை சேகரித்து தொடர்ந்து ஆய்வு செய்யும்போது மேலும் உறுதியான முடிவுகள் கிடைக்கும்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *