பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் செயல்படாமல் இருக்கலாமா..? – கி.வீரமணி கேள்வி

கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் மிக முக்கியமாக கருதப்படும் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்திற்கு தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படாத நிலையில் ஒரு செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்தும், உடனே அதனை செயல்பட வைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாடு அரசின் சார்பில் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் என்பது 1993 முதல் நிரந்தரமாக அமைக்கப்படும் ஆணையம் ஆகும்.

அந்த ஆணையத்துக்கு தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் மொத்தம் ஒன்பது உறுப்பினர்கள் உள்ளனர்.

அதில் தலைவர், பிற்படுத்தப்பட்ட நலனில் அனுபவம் வாய்ந்த முக்கிய உறுப்பினர்கள் ஆறு பேர், அரசு அதிகாரிகள் இருவர் – அதில் பிற்படுத்தப்பட்டோர் துறை அதிகாரிகள் என்கிற தன்மை காரணமாக உறுப்பினர்களாக இருப்பார்கள். (பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட துறையின் அதிகாரிகள் அதில் இருவர்).

கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர், உறுப்பினர்கள் நியமனம் செய்யப்படாமல், அந்த கோப்புகள் அப்படியே இருப்பதாக அறியப்படுகிறது.

மிக முக்கியமான வழக்குகளை தாக்கல் செய்து, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான உரிமைகளுக்காக நீதிமன்றங்களில் வாதாடிடும் இந்த காலகட்டத்தில், இப்படி ஒரு தேக்கநிலை – அதுவும் ஏறத்தாழ 18 மாதங்களாக செயல்படாமலேயே இருக்கிறது என்ற தகவல் அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

நல்ல சட்ட அனுபவம், நீதிபரிபாலன அனுபவம், சட்ட ஞானம், சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கையும், செயல்திறன் உடைய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாய ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழ் நாட்டில் ஏராளம் உள்ள நிலையில், அரசு தகுதியான ஒருவரை உடனடியாக நியமிக்க வேண்டியது அவசர அவசியம் அல்லவா..! இதற்கு என்ன தயக்கம்..?

மேலும் காலதாமதம் செய்வது தவறு ; சமூக நீதித் துறையில் இப்படி ஒரு தாமதம் – கிடப்பு ஏற்பட்டது மிகவும் வேதனைக்குரியது. உடனடியாக செயல்பட வேண்டியது முக்கியம்!”

இவ்வாறு அந்த அறிக்கையில் திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *