தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்- சுப.உதயகுமார்

“தந்தை பெரியார் அவர்களின் சிலைகளை திட்டமிட்டுத் தாக்குவதைக் கடுமையாக எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம். தமிழக அரசு இந்த சமூக விரோத பாசிஸ்டுகளின் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இவர்களிடமிருந்து தமிழகத்தை, தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது பதிவில், “கோவையிலும், கள்ளக்குறிச்சியிலும் தந்தை பெரியார் அவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டிருப்பது பாசிஸ்டுகளின் திட்டமிட்ட சதிச்செயலேயன்றி வேறல்ல.
இன்னும் ஓராண்டு காலத்தில் தேர்தலை சந்திக்கவிருக்கும் தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டியாவது, ஓரிரு இடங்களில் வென்றாக வேண்டும் என்று சில பாசிச சக்திகள் கணக்குப் போட்டு இயங்குகிறார்கள்.
நபிகள் நாயகத்தைப் பற்றி தரக்குறைவாகப் பேசி, கருத்துப்படங்கள் வரைந்து, இசுலாமியர்களைக் கோபப்படுத்தினால், ஒரு பெரும் பிரச்சினை எழும்; அதில் குளிர்காயலாம் என்று நினைத்தார்கள். ஆனால் இசுலாமியத் தோழர்கள் அந்த சதித்திட்டத்தை அருமையாக முறியடித்து விட்டார்கள்.
பார்ப்பனீயத்தின் பைத்தியக்காரத்தனங்களை, பச்சைத் துரோகங்களை, பத்தாம்பசலித்தனங்களை எல்லாம் தமிழ் மக்கள் மத்தியில் எடுத்துரைத்து, காவி அரசியலை இந்த மண்ணில் தலைதூக்கவிடாமல் செய்துவிட்ட தந்தை பெரியாரின் பெயரும், கொள்கைகளும், கருத்துக்களும் பாசிஸ்டுகளுக்கு பெரும் நெருக்கடியாக இருப்பதால், அவரைச் சீண்டினாலாவது ஒரு கலவரம் வராதா, கொஞ்சம் தலைதூக்கிவிட முடியாதா என்று தவிக்கின்றனர் அவர்கள்.
அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தந்தைப் பெரியார் அவர்களின் சிலைகள் அவமதிக்கப்பட்டிருப்பது இந்தக் கொடியத் திட்டத்தின் முதற்படி. இன்னும் முயல்வார்கள். விடாது முயற்சிப்பார்கள்.
தமிழக அரசியல் களத்தை இந்துத்துவம் – திராவிடத்துவம் என செங்குத்தாகப் பிளப்பது, மதவெறியை விதைப்பது, கலவரம் செய்வது, மோடி-சாவின் உதவியோடு அரசியல் தகிடுதத்தங்கள் செய்து நினைத்ததை சாதிப்பதுதான் இவர்களின் திட்டம்.
தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராக இயங்கும் இவ்விரண்டு சித்தாந்தங்களையும் தவிர்க்க விரும்பும்  பச்சைத் தமிழகம் கட்சி, தந்தை பெரியாரின் தேர்ந்த பாசிச எதிர்ப்புக் கொள்கைகளை, விழுமியங்களை, கருத்துக்களை  ஆதரிக்கிறது. பாசிசத்துக்கு எதிரானப் போரில் தந்தை பெரியார் அவர்கள் ஒரு மிக முக்கியமான ஆயுதம் என்பதை வலியுறுத்துகிறது.
குழந்தையைக் குளிப்பாட்டிய தண்ணீரைக் கொட்டும்போது, குழந்தையையும் கூடவே எறிந்துவிடுவது எவ்வளவு பெரிய அறிவீனமோ, அதேபோன்றதுதான், தந்தை பெரியாரின் சில திராவிடக் கொள்கைகளை விமரிசிக்கும்போது, அவரையே மொத்தமாகத் தூக்கி எறிந்துவிட முனைவதும்.
“திராவிடத்துவம் ஒன்றே தமிழினத்தின் அரசியல், அதனுடைய கடைசித் தூதர் பெரியார்” எனக்கொண்டு, ஓர் அறமற்ற அடிமை அரசியலை தமிழரின் புனித மதமாக மாற்றுவதை நாங்கள் கேள்விக்குள்ளாக்குகிறோம். அதே நேரம், தந்தை பெரியார் வாழ்ந்ததும், தமிழ் மக்களுக்காகப் போராடியதும் வரலாற்று உண்மைகள். அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலம் ஆனபிறகு, அன்று அவர் அப்படிச் சொன்னார், அடுத்தநாள் இப்படிச் சொன்னார் என்றெல்லாம் விவாதித்துக் கொண்டிருப்பது வீண்வேலை என்றே நாங்கள்  கருதுகிறோம்.
இப்படி நூல்பிடித்துப் பார்க்கும் அரசியலைக் கைக்கொண்டால், அறிஞர் கார்ல் மார்க்சோ, புரட்சித் தலைவர் லெனினோ, மகாத்மா காந்தியோ, அண்ணல் அம்பேத்கரோ, தந்தை பெரியாரோ, மார்டின் லூதர் கிங்கோ, மால்கம் எக்சோ, நெல்சன் மண்டேலாவோ யாரும் தப்ப முடியாது.
இவர்களின் தேர்ந்த விழுமியங்களை ஏற்றுக்கொண்டு, இவர்களைத் தொடர்ந்து மறுவாசிப்புச் செய்தவாறே, இவர்களைச் சுற்றிக் கட்டமைக்கப்படும் மதங்களிடமும், மதகுருமார்களிடமும் சிக்கிக்கொள்ளாது, தமிழினத்தின், இந்தியத் துணைக்கண்டத்தின், இவ்வுலகின் அரசியல் நகர்வுகளைத் திட்டமிடுவோம். அது ஒன்றே அடுத்தக்கட்ட அரசியலுக்கான வழி!
தமிழக பாசிஸ்டுகள் தந்தை பெரியார் அவர்களின் சிலைகளை திட்டமிட்டுத் தாக்குவதைக் கடுமையாக எதிர்க்கிறோம், கண்டிக்கிறோம். தமிழக அரசு இந்த சமூக விரோத பாசிஸ்டுகளின் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு, இவர்களிடமிருந்து தமிழகத்தை, தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.”
இவ்வாறு பச்சைத் தமிழகம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *