பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை

மத்திய பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு செல்லும் வழியில் காவல்துறை வாகனத்தில் இருந்து தப்ப முயன்ற பிரபல ரவுடி விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

உத்தரப் பிரதேசம் கான்பூரில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி விகாஸ் துபேவை கைது செய்ய கான்பூர் மாவட்ட காவல்துறையினர் சென்றனர். அப்போது காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் ரவுடி விகாஸ் சுட்டதில் டிஎஸ்பி, 3 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 8 காவலர்கள் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ரவுடி கும்பலை கூண்டோடு கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர். இதன் ஒரு கட்டமாக காவல்துறையிடம் இருந்து தப்ப முயன்ற விகாஸ் துபேவின் கூட்டாளிகள் இரண்டு பேர் நேற்று (09/09/2020) என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்தநிலையில் மத்தியபிரதேசம் உஜ்ஜயினியில் பதுங்கியிருந்த விகாஸ் துபேவை சுற்றி வளைத்த மத்தியபிரதேச காவல்துறையினர் நேற்று (09/09/2020) அவரை கைது செய்தனர். அங்கிருந்து உத்தரப் பிரதேசத்துக்கு கார் மூலமாக விகாஸ் துபேவை காவல்துறையினர் அழைத்து வந்தனர்.

அப்படி விகாஸை அழைத்து வந்து காவல் வாகனம் மழையின் காரணமாக கான்பூர் அருகே விபத்துக்குள்ளானதாகவும், இதனை பயன்படுத்தி விகாஸ் தப்ப முயன்ற தாக கூறப்படுகிறது.

இதனால் காவலர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி பிடிக்க முயன்றதாகவும், இதில் விகாஸ்  படுகாயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் பெரும் சவாலாக இருந்த விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை அம்மாநில காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *