அமெரிக்காவில் தொடரும் காவல் அதிகாரிகளின் இனவெறி: அம்மா, அம்மா என்று கதறிய கறுப்பின இளைஞர் காவலர் வன்முறையால் பலி

அமெரிக்காவில் டயர் நிக்கோலஸ் என்ற 29 வயது கறுப்பின இளைஞர் ஒருவர் காவல்துறையினர் வன்முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுபோன்ற சம்பவங்கள் புதிதல்ல என்பதை நிரூபிப்பது போலவே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் மெம்ஃபிஸ் நகரில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. அதுவும் அவரது வீட்டிலிருந்து 90 மீட்டர் தொலைவில் தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. இருச்சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த நிக்கோலஸை காவல்துறையினர் திடீரென சுற்றி வளைக்கின்றனர். அப்போது அவரை தரையில் படுக்குமாறு எச்சரிக்கின்றனர். அந்த இளைஞரும் காவல்துறையினர் சொல்வது போல் செய்கிறார். ஆனால் அப்படியிருந்தும் அவரைத் தாக்குகின்றனர். அந்த இளைஞரோ “நான் தான் நீங்கள் சொன்னதை செய்துவிட்டேனே” என்று கேட்கிறார். அப்போது இன்னொரு காவல் அதிகாரி “நீ உன் கைகளை பின்னால் கட்டுகிறாயா இல்லை நான் அவற்றை அடைக்கவா?” என்று கேட்கிறார். உடனே நிக்கோலஸ் கைகளைக் கட்டுகிறார். அப்படியிருந்தும் தாக்குதல் தொடர்கிறது. பொறுக்க முடியாமல் அவர் அலறுகிறார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடுகிறார். அவரை டேஸர் எனப்படும் மின்சாரம் பாய்ச்சும் கருவி மூலம் வீழ்த்துமாறு சக அதிகாரிகள் கூற இன்னொரு காவலர் டேஸரை பயன்படுத்துகிறார். நிக்கோலஸ் வீழ்கிறார். அவர் “அம்மா அம்மா” என்று கூக்குரல் இடுகிறார். 90 மீட்டர் தொலைவில் இருக்கும் தனது அம்மாவுக்கு தனது அபாயக் குரல் கேட்காதா என்ற எதிர்பார்ப்புடன் கதறுகிறார். ஆனால் கதறலுக்கு இடையே தாக்குதல் நடக்க நிக்கோலஸ் உயிரிழக்கிறார். இவை அனைத்துமே காவல்கள் அணிந்திருந்த உடம்பு கேமரா எனப்படும் உடலோடு பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஐந்து காவலர்கள் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இச்சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் அதிவலைகளை ஏற்படுத்தியுள்ளன. நிக்கோலஸீக்கு நீதி வேண்டி போராட்டங்கள் தொடங்கியுள்ளன. சம்பவத்தில் ஈடுபட்ட ஐந்து அதிகாரிகளுமே கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் தான். டடாரியஸ் பீன், டெமட்ரியஸ் காலி, எம்மிட் மார்டின், டெஸ்மாண்ட் மில்ஸ் ஜீனியர், ஜஸ்டீன் ஸ்மித் ஆகிய ஐந்து பேரும் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மெம்ஃபிஸ் நகரில் நடந்த இந்தக் கொடூர சம்பவம் தொடர்பான பாடி கேம் வீடியோ வெளியாகி அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *