லடாக் ஆக்கிரமிப்பு விவகாரம்: மோடியின் எந்த உரையிலும் “சீனா” வின் பெயரை குறிப்பிட வில்லையே ஏன்..? – ப.சிதம்பரம் கேள்வி

எந்த உரையிலும் “சீனா” என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா..? என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்திய – சீன எல்லையில் நடைபெற்ற சண்டையில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வந்த எல்லை மோதல் பூதாகரமாகி உள்ளது. சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மத்திய பாஜக அரசிடம் கேள்வி எழுப்பி வருகின்றன.

ராணுவ வீரர்கள் பற்றியும், எல்லை விவகாரம் பற்றியும் பேசும் பிரதமர் நரேந்திர மோடி, சீனாவின் பெயரை எங்குமே குறிப்பிடுவதில்லை என்று குற்றச்சாட்டுகளையும் எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று (03-07-2020) ஜம்மு – காஷ்மீர் மாநிலம் லடாக்கின் லே பகுதியில் அமைந்துள்ள முகாமில், ராணுவ வீரர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரை நிகழ்த்தினார். அப்போதும் “சீனா” எனக் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில், முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் “சீனா” என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா..? என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம், “முதலமைச்சர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் “சீனா” என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா…?

இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா..? அல்லது சந்திரமண்டலத்தில் இருந்து வந்த அந்நியர்களா..? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்ல மாட்டேன். ஆனால், தயங்குகிறார் என்று சொல்லுவேன். ஏன் இந்த தயக்கம்..?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *