இன்றுடன் நிறைவடையும் ராகுல் காந்தியின் நடைபயணம் மக்களிடமும் ஆட்சியிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்: செல்வப்பெருந்தகை நம்பிக்கை
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் மக்களிடமும், மத்திய ஆட்சியிலும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கடந்த ஆண்டு செப்.7ம் தேதி ராகுல் காந்தி, ஸ்ரீபெரம்பத்தூரில் அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபிறகு, கன்னியாகுமாரி மாவட்டத்தில், முதல்வர் ஸ்டாலினால் தொடங்கிவைக்கப்பட்ட இந்திய ஒற்றுமை பயணத்தில் பங்கேற்று பல மாநிலங்கள் வழியாக, 3 ஆயிரத்து 570 கிமீ தூரம் நடைபயணமாக சென்று, ஜம்மு-காஷ்மீரை அடைந்துள்ளார். உறுதியான அவரது இந்திய ஒற்றுமை பயணம் இன்று(ஜன.30) நிறைவடைகிறது.
இந்திய ஒற்றுமை யாத்திரையில் பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், அனைத்து தன்னார்வலர்கள், புகழ்பெற்ற பத்திரிகையாளர்கள், பொருளாதார நிபுணர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபல நடிகர்கள், விவசாயிகள், தொழில் முனைவோர் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
தன்னலம் கருதாத அரசியல் தலைவர் ஒருவரால்தான் கன்னியாகுமரி முனையிலிருந்து காஷ்மீர் முனை வரை இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொள்ள முடியும். விடுதலை பெற்ற இந்திய வரலாற்றில் இந்த பயணம் ஒரு உயர்ந்த வரலாற்றுச் சாதனையாகும்.
இந்திய ஒற்றுமை பயணம் எந்தநல்ல நோக்கத்துக்காக நடத்தப்பட்டதோ, அந்த நோக்கமானது, வரும் காலங்களில் மக்கள் மன்றத்தில் நிச்சயமாக எதிரொலிக்கும். நாட்டில் வெறுப்பையும், பிரிவினையையும், மக்களிடையே அச்சத்தையும் உண்டாக்கி, அதன் மூலம் ஆட்சி செய்யும் பாஜகவின் கோரப்பிடியிலிருந்து இந்தியா கண்டிப்பாக விடுதலையாகும்.
உலக வரலாற்றில் அரசியல் தலைவர்கள், சீர்திருத்தவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட நடைபயணங்கள் மக்கள் சமூகத்தில், ஆட்சியில் எவ்வாறு மாற்றங்களை கொண்டுவந்ததோ அதேபோன்று ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணம் மூலம்நாட்டில் மக்களிடமும், ஆட்சியிலும் சிறந்த மாற்றங்களை கொண்டுவரும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.