“ராமர் பெயரில் ஊழல்… சில நிமிடங்களில் ரூ.16.50 கோடி விலை உயர்வு” – அயோத்தி நிலம் வாங்கியதில் முறைகேடு

“ராமர் பெயரைச் சொல்லி ஏமாற்றுவது அநியாயம்” என்றும் ராமர் கோயிலுக்கு நிலம் வாங்கியதில் 16 கோடியே 50 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்துள்ளது என்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
“பகவான் ராமர் என்றாலே உண்மை, நீதி மற்றும் மதம். அவரது பெயரை சொல்லி ஏமாற்றுவது அநியாயம்” என ராகுல் காந்தி ட்விட்டரில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அத்துடன் ராமர் கோயில் ஊழல் என்ற ஹேஷ்டேக்கையும் அவர் பயன்படுத்தியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து கோயில் கட்டுவதற்காக ராமர் கோயில் அறக்கட் டளை உருவாக்கப்பட்டு, 70 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. கோயில் கட்டுவதற்காக அறக்கட்டளை சார்பில் பொதுமக்களிடமிருந்தும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோயில் அருகேயுள்ள ஒரு நிலத்தை அறக்கட்டளை நிர்வாகம் 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளது. தனிநபரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட அந்த நிலம், சில நிமிடங்களிலேயே அதிக தொகைக்கு அறக்கட்டளை மூலம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தனிநபர் ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலம், அடுத்த சில நிமிடங்களில் ராமர் கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள அறக்கட்டளைக்கு 18 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, சமாஜ் வாதி மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
எனினும் இந்தக் குற்றச்சாட்டை அறக்கட்டளை நிர்வாகிகள் மறுத்துள்ளனர். இந்த முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவேண்டும் என சமாஜ்வாதி கட்சி வலியுறுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ராமர் கோயில் நில மோசடி அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “ராமா, உங்கள் பெயரில் பெற்ற நன்கொடையில் ஊழல் செய்கின்றனர்.” என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *