ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைதுக்காக நாங்கள் காத்திருந்தோம் : தற்கொலை செய்து கொண்டவரின் மகள் பேட்டி

ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டதை, கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட கட்டட வடிவமைப்பாளரின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர்.

அலிபாக் பகுதியை சேர்ந்த உள் கட்டட வடிவமைப்பாளர் அன்வாய் நாயக் தனது தாயார் நாயக்குடன் கடந்த 2018ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு, ரிபப்ளிக் தொலைக்காட்சி செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி, பெரோஸ் சேக், நிதிஷ் சதா ஆகியோர் தனக்கு தரவேண்டிய 5.40 கோடி ரூபாயை தராததே காரணம் என அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அர்னாப் கோஸ்வாமி மீது வழக்குப்பதிவு செய்த மும்பை காவல்துறையினர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் டிஆர்பி ரேட்டிங் தொடர்பான வழக்குகளையும் முன்வைத்து அவரை இன்று காலை கைது செய்தது. அப்போது அவர் காவல்துறையுடன் கடுமையான வாக்குவாதம் செய்தார்.

இந்த அர்னாப் கோஸ்வாமியின் கைது நடவடிக்கையை அன்வாய் நாயக்கின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வரவேற்றுள்ளனர். இதுதொடர்பாக அவரது மகள் கூறும்போது, “என் அப்பாவுக்கு தரவேண்டிய 83 லட்சம் ரூபாயை அர்னாப் கோஸ்வாமி தரவில்லை. பணத்தை தொடர்ந்து கேட்டபோது என் தந்தை அர்னாபால் மிரட்டப்பட்டார். எங்களை பின் தொடர்ந்து யாராவது பைக்கில் வருவார்கள். எங்கள் தொலைபேசியை ஒட்டுக் கேட்பது, வீட்டுக்குள் வந்து சிலர் உட்கார்ந்து கொண்டு மன உளைச்சலை ஏற்படுத்துவார்கள். என்னுடைய வேலை, தொழிலை ஒன்றுமில்லாமல் செய்து விடுவதாக மிரட்டினார். என் அப்பா தற்கொலை செய்யும் முன்பு அர்னாப் பெயரை எழுதி வைத்து எழுதிவைத்துவிட்டு இறந்தார்.

என் அப்பா உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி நாங்கள் ஏறாத இடமில்லை. ஆனால், திடீரென்று ஒருநாள் வழக்கு முடிக்கப்பட்டு விட்டது என்று சொன்னார்கள். அர்னாப் கோஸ்வாமி கைதுக்காக இத்தனை நாள் நாங்கள் காத்திருந்தோம். இந்தக் கைதை வரவேற்கிறோம். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கூறினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *