தனிமனித இடைவெளியும், முக கவசம் அணிவதும் இந்தியாவில் 2 லட்சம் இறப்புகளை தடுக்கும் – வாஷிங்டன் பல்கலைக்கழகம் அறிவுறுத்தல்

தனிமனித இடைவெளியும், முக கவசம் அணிவதும் இந்தியாவில் இரண்டு லட்சம் இறப்புகளை தடுக்கும் என்று வாஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி மக்களின் பயன்பாட்டுக்கு வருகிற வரையில், தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகக்கவசம், தனிமனித இடைவெளி, கை சுத்தம் ஆகிய மூன்றும் தான் பாதுகாப்பு கவசங்களாக பயன்படும் என உலக சுகாதார நிறுவனம் தொடங்கி அனைத்து தரப்பினராலும் வலியுறுத்தப்படுகிறது.

இந்தியாவில் ஆரம்பத்தில் முகக்கவசம் பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டை பெறாத போதும் இப்போது பெரும்பாலான மக்கள் விழிப்புணர்வு பெற்று அணிய தொடங்கி இருக்கிறார்கள்.

விதவிதமான முகக் கவசங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இருப்பினும் இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

தற்போது வரை இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல் இந்த நோய்த் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதேசமயத்தில் நோய்த் தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதுவரை நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 29 லட்சத்து 1,908 ஆக உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 1,282 ஆக உள்ளது.

உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. அதே போல் உயிர் இறப்பிலும் மூன்றாம் இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது. ஆனால், தற்போதைய நிலையில் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது கவனிக்கத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீட்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் முகக் கவசம் அணிவதையும், தனிமனித இடைவெளியை பின்பற்றுவதையும்  கடைபிடித்தால் டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் 2 லட்சம் உயிரிழப்புகளை தடுக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *