“ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ்.. கைதானவர்களுக்கு நிவாரணம்” – தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய திமுக

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி 2018ம் ஆண்டு தூத்துக்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தைத் தொடரவிடாமல், அப்போதைய அ.தி.மு.க அரசு காவல்துறையினரை ஏவி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறி ஏராளமானோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அப்போதைய அ.தி.மு.க அரசின் இந்த அராஜக நடவடிக்கைக்கு தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டம் தெரிவித்திருந்தன. இதையடுத்து, இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

பின்னர், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற விசாரணையின் இடைக்கால அறிக்கையை முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், கடந்த 14-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.

இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையின் காரனமாக பொதுமக்களுக்கு ஏற்பட்ட உயிரிழப்பு, காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் இடைக்கால அறிக்கை மே 14ம் தேதி தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் இந்தப் போராட்டம் குறித்து காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் தேவையற்ற வழக்குகளை திரும்பப் பெற ஆணையம் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் காவல்துறைத் தலைவரின் அறிக்கை பெறப்பட்டு அரசால் கவனமாக பரிசீலிக்கப்பட்டது. மேற்கூறிய பரிந்துரைகள் மற்றும் கருந்துரைகளின் அடிப்படையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பின்வரும் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளார்.

1.இந்தச் சம்பவம் குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த வழக்குகளில், மத்திய குற்றபுலனாய்வுத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ள வழக்குகள், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பதியப்பட்டுள்ள வழக்குகள் தவிர, ஏனைய வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

  1. 22-05-2018 அன்று நடந்த சம்பவத்துக்கு முன்னர் இந்தப் போராட்டம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் உள்ளிட சில வழக்குகள் தவிர ஏனைய வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
  2. காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 94 நபர்களில் சிலருக்கு காயங்களும், பலருக்கு மனஉளைச்சலும் ஏற்பட்டதைக் கருதி அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அதனடிப்படையில், 93 நபர்களுக்கு நிவாரணமாக தலா ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும். இதுதவிர ஒரு நபர் வேறு ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையிலேயே இறந்துவிட்டதால், வாழ்வாதாரம் இழந்துவாடும் அவரது 72 வயது தாயாருக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும்.
  3. ஆணையம் அளித்துள்ள பரிந்துரையின் அடிப்படையில் போராட்டத்தின்போது தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்ட நபர்களின் உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *