ஸ்டெர்லைட் வழக்கு: டிசம்பர் மாதத்திற்கு விசாரணையை ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதை தொடர்ந்து ஸ்டெர்லைட்  நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு நேற்று முன்தினம் (16.11.2020) நீதிபதிகள் நவீன் சின்ஹா  மற்றும் கே.எம். ஜோசஃப் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் முகுல் ரோதங்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.

அதில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஸ்டெர்லைட் ஆலை மீறியதாக கூறப்பட்ட பல விதிமீறல்கள் சரிசெய்யப்பட்டுவிட்டன. இன்னும் மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்து ஆலையை திறக்க அனுமதி கொடுத்தால் அனைத்து நிபந்தனைகளும் சரி செய்யப்படும் என்றும், பிரச்சனையை சுமூகமாக முடிக்க வேண்டும் எனவும், இந்திய காப்பர் உற்பத்தியை கணக்கில் எடுத்துகொண்டு பிரச்சனைக்கு தீர்வுகாண வேண்டும். அதற்கேற்ற பொருத்தமான வடிவில் குறைந்த பக்க அளவில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக வாதிட்டார்.

அவரைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தங்கி, விசாரணை ஆணையம் அமைத்துதான் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு எதிராக அரசு தரப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ் . வைத்தியநாதன், கே.வி.விஸ்வநாதன் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் காலின் கொன்சால்வேஸ், வழக்கறிஞர் சபரீஷ் ஆகியோர் ஆஜராகி ஸ்டெர்லைட்  நிறுவனத்தின் வாதங்களை ஏற்றுக்கொள்ள முடியாது, சுற்றுப்புறசூழலை மாசு படுத்தியதால் தமிழக அரசு நிரந்தரமாக அந்த ஆலையை மூடியது, பின்னர் விரிவான விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம்  ஆலையை நிரந்தமாக மூடியதை ஏற்று  இறுதி தீர்ப்பு வழங்கியது என்று வாதிட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வாய்ப்பே இல்லை என்று அரசு தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி பிரமாண பத்திரம் தாக்கல் செய்யட்டும், இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகே இடைக்கால தீர்ப்பு தேவையா? என்பதை முடிவு செய்வோம் என்று தெரிவித்து, டிசம்பர் மாதம் முதல்வாரத்திற்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *