சுரப்பா மீதான புகார்கள் தொடர்பாக அடுத்த வாரத்துக்குள் சாட்சிகளிடம் விசாரணை: நீதிபதி கலையரசன்

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா மீதான புகார்கள் தொடர்பாக சாட்சிகளிடம் அடுத்த வாரத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்கப்படும் என்று நீதிபதி கலையரசன் தகவல் தெரிவித்தார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.கே.சுரப்பா மீது ரூ.280 கோடி ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஒய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான 7 பேர் கொண்ட ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று விசாரணை பணிகளை முடிக்க ஆணையத்துக்கு கூடுதலாக 3 மாதம் காலஅவகாசம் வழங்கப்பட்டது.

இதையடுத்து பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் புகார் அளித்தவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாரணை குழுவில் பணியாற்றும் அதிகாரிகள் சிலருக்கு கரோனோ தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக விசாரணைப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் திட்டமிட்ட காலத்துக்குள் விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஒய்வுபெற்ற நீதிபதி கலையரசன் கூறியதாவது: விசாரணைப் பணிகள் 85 சதவீதம் முடிந்துவிட்டன. கரோனா பரவல் சூழல் காரணமாக சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதில் தாமதம்ஏற்பட்டுள்ளது. அடுத்த வாரத்துக்குள் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடிக்கப்படும். அதன்பின் சுரப்பாவிடம் நேரடி விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அப்போது தனது தரப்பு விளக்கங்களை தெரிவிக்க சுரப்பாவுக்கு போதுமான வாய்ப்புகள் வழங்கப்படும். அரசு வழங்கிய காலக்கெடுவுக்குள் விசாரணை பணிகளை முடித்து அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *