மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சித்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் திருச்சூரை அடுத்துள்ள செம்மனூர் என்ற பகுதியை சேர்ந்தவர் தலேகட்டில் விட்டில் ஸ்ரீமதி. 75 வயதுடைய மூதாட்டியான இவருக்கு மனோஜ் (வயது 55) என்ற மகன் உள்ளார். மனோஜ் குடிபோதைக்கு அடிமையானவராக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மகன் மனோஜ் தனது தாயிடம் மது வாங்க பணம் கேட்டுள்ளார். அதற்கு தாய் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் குடித்தே சொத்தை அழிப்பதாக கடுமையாக திட்டியுள்ளார். இருப்பினும் பணம் கேட்டு மகன் நச்சரித்துள்ளார். தாயும் அதற்கு கொடுக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மகன் மனோஜ் பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும் இனி நீ உயிருடன் இருப்பதில் அர்த்தம் இல்லை என்று கூறி அருகில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்து அவர் மீது பெட்ரோலை ஊற்று உயிருடன் நெருப்பு வைத்துவிட்டு தப்பியோடியுள்ளார்.

இதனால் எரிச்சல் தாங்கமுடியாமல் கதறிய தாயின் அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவர் மீது இருந்த நெருப்பை அணைத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் மூதாட்டி ஸ்ரீமதியிடம் வாக்குமூலம் பெற்றனர். அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் மகன் மனோஜை கைது செய்தனர். மது அருந்த பணம் கொடுக்க மறுத்த தாயை உயிருடன் எரித்து கொலை செய்ய முயற்சித்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *