கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் முழு ஊரடங்கு ; நள்ளிரவு 12 முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை

கடந்த மார்ச் 24 முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் பொது முடக்கத்தினால் கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும், பல மாவட்டங்களில் நோய்த்தொற்றின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் இன்று நள்ளிரவு 12 மணி முதல் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது.

இந்த வைரஸ் தொற்றின் காரணமாக மாநிலம் முழுவதும் சில தளர்வுகளுடன்  ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தால் ஓரளவு நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டாலும், சென்னையை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.

இதற்கு காரணம் மாநிலம் முழுவதும் மண்டலம் வாரியாக போது போக்குவரத்துக்கு அனுமதி அளித்ததுதான் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் வரும் 31-ஆம் தேதி வரை ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்திற்கு முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் கட்ட ஊரடங்கின் போது வணிக வளாகங்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள், பொது நிகழ்ச்சிகளுக்கு தடையை நீட்டித்து அத்தியாவசிய பொருட்கள், விற்பனை மற்றும் சரக்கு வாகனங்கள், ஆட்டோக்கள், கால் டாக்சிகள் இயங்க அரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

அதே நேரம் வரும் 31-ஆம் தேதி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வுமின்றி குறிப்பாக அவசர மருத்துவ சேவையை தவிர அனைத்துக்கும் தடை விதித்து முழு ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.

மூன்றாவது வாரமாக வரும் 19ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தளர்வில்லா ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இதனால் இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை மறுநாள் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். இதையடுத்து இன்று நள்ளிரவு 12  மணி முதல் தமிழகத்தில் உள்ள 37 மாவட்ட எல்லைகள் மற்றும் வெளிமாநில எல்லைகளும் மூடப்படும். இந்த காலகட்டத்தில் மருத்துவத்தை தவிர எந்தவித அத்தியாவசிய தேவைக்கும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை உட்பட மாநிலத்தில் உள்ள அனைத்து தேசிய, மாநில மற்றும் மாவட்ட நெடுஞ்சாலைகள் மூடப்படுகிறது. அதேபோல் மாவட்ட தலைநகரங்களில் உள்ள காய்கறி, பழம் மற்றும் மீன் மார்க்கெட் என அனைத்தும் மூடப்படுகிறது. இதை அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர்கள் நேரடியாக பார்வையிட்டு உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே, மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதையும் மீறி வெளியே சென்றால் அவர்கள் மீது எந்த நிபந்தனையுமின்றி வழக்கு பதிவு செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொருத்தவரையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுபடி மாநகரம் முழுவதும் 198 இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதிகளில் டிரோன் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் அந்தந்த மாவட்ட துணை ஆணையர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *