மாணவர் சேர்க்கையில் 12 லட்சத்தை தாண்டிய அரசுப்பள்ளிகள்: போதிய அளவில் ஆசிரியர்கள், வகுப்பறைகள் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன்

இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும், அதற்கேற்ற வகையில் வகுப்பறைகள், ஆசிரியர்கள் இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளிகளில் 2020 – 2021 ஆம்  கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்கியது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் வேறு பள்ளிகளிலிருந்து மாறுதல் பெறும் மாணவர்களுக்கும் ஆகஸ்ட் 24ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

இதற்கிடையே ஆகஸ்ட் இறுதியிலேயே மாணவர் சேர்க்கை 10 லட்சத்தை தாண்டியது. தற்போது பன்னிரண்டு லட்சத்தைத் தாண்டி மாணவர் சேர்க்கை உயர்ந்து வருகிறது. விரைவில் இந்த எண்ணிக்கை 15 லட்சத்தை எட்டும் என்று தெரிகிறது.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகவும் அதற்கேற்ற வகையில் வகுப்பறைகள், ஆசிரியர்கள் இருப்பதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கன்று வளர்ப்பு, பயிர் கடன், தனிநபர் கடன் என சுமார் நான்கு கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டப்பணிகள் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிறகு அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், “இப்போது இருக்கும் ஆசிரியர்களை வைத்துக்கொண்டு கற்றல் பணிகளை நிறைவேற்ற முடியும். வகுப்பறைகளைப் பொறுத்தவரையில் போதுமான அளவு இருக்கின்றன. ஒரு சில இடங்களில் சேர்க்கை அதிகரித்து கூடுதல் மாணவர்கள் சேர்ந்தால், முதல்வரின் ஒப்புதலைப் பெற்று அவர்களுக்கான கட்டட வசதிகள் கட்டப்படும்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *