விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ அனுமதி இல்லை – தமிழக அரசு அதிரடி

“பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும். பொது இடங்களில் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழாக் கொண்டாடுவதோ, அவற்றை ஊர்வலமாக எடுத்துச் செல்லவோ, அல்லது சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ அனுமதிக்க இயலாது” என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று (13-08-2020) வெளியிட்ட அறிவிப்பில், “தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 22ஆம் தேதி அன்று கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க பொது விழாக்களைத் தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கவும், பொதுமக்கள் நலன் கருதியும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதோ, அச்சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது. எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் பண்டிகையை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு, சந்தைகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்திட வேண்டும் என்றும், அனைத்து இடங்களிலும் தனிமனித இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

சிறிய கோயில்களில் பொதுமக்கள் வழிபட அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ள நிலையில், அத்தகைய கோயில்களில் வழிபாடு செய்யும்போது அறிவுறுத்தப்பட்ட நெறிமுறைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு பொதுமக்களும், கோயில் நிர்வாகமும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், அவ்வாறு வழிபாட்டுத் தலங்களுக்கும், பொது இடங்களுக்கும் செல்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து, உரிய தனி மனித இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.”

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *