தமிழகம் முழுவதும் காவல் நண்பர் குழுவுக்கு (Friends of Police) தடை

தமிழக காவல்துறையில் காவலர்கள் நண்பர் குழுவினருக்கு (Friends of Police) தடை விதித்து காவல்துறை தலைமை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை – மகன் காவல்நிலையத்தில் வைத்து சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் உலகையே அதிர்ச்சி அடைய வைத்தது.

காவல் நிலையத்தில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவத்திற்கு  காவலர்களுடன் சேர்ந்து காவல் நண்பர்கள் குழுவினரும் (Friends of Police) ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகியோரை தாக்கியதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு கிளை அமைப்பான “சேவா பாரதி” எனும் அமைப்பினரே சாத்தான்குளம் காவல் நண்பர்கள் குழுவில்(Friends of Police) இயங்குகின்றனர். காவல்துறையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கேற்பு மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மத ஒடுக்குமுறையை காவல்துறை மூலம் நடத்த இது ஒரு வாய்ப்பளித்து விடும் என்று குற்றச்சாட்டு எழுந்தது.

“சேவாபாரதி” அமைப்பை அதிலிருந்து நீக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் பொதுமக்களிடமிருந்து வந்தது. மேலும், காவல் நண்பர்கள் குழுவின் (Friends of Police) நோக்கம் என்ன..? அதிகார வரம்பு என்ன..? விசாரணைக்கு வருபவர்களை அடிக்க அவர்களுக்கு அதிகாரம் எப்படி கொடுக்கப்பட்டது..? போன்ற பல கேள்விகள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டது.

சாத்தான்குளம் விவகாரத்தில் “சேவாபாரதி” அமைப்பைச் சேர்ந்த காவல் நண்பர்கள் குழுவினர் (Friends of Police) ஐந்து பேர் மீது வழக்குப் பதிய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அது மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் காவல்துறையினருடன், சீருடை இல்லாமல் நிற்கும் சிலர் மக்கள் மீது ஆங்காங்கே தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகியுள்ளது. இது தொடர்பான புகார்களும் கூறப்பட்டு வந்தது.

தொடர் சர்ச்சை எழுந்து நிலையில் தான், விழுப்புரம், அரியலூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர் ஆகிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் இந்த காவல் நண்பர்கள் குழுவை (Friends of Police) தடை செய்து உத்தரவிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பணியை இனி ஊர்க்காவல் படையினர், முன்னாள் படை வீரர்கள் ஆகியோரை வைத்து பயன்படுத்திக்கொள்ளவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை மீறி செயல்படும் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊர்காவல் படையினர் பணிக்கு பயன்படுத்தும் போது, அவர்களுக்கான வரம்போடு காவல்துறை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *