தமிழ் வழிக் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீடு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் காட்டம்

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் தமிழ் இருக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ் வழியில் படித்து டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு எழுதுவோருக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இந்த இட ஒதுக்கீட்டை பலர் முறைகேடான வழியில் பெறுவதாக மதுரையைச் சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கு இன்று (04-11-2020) உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, “தமிழகத்தில் தமிழில் படித்தவர்கள் அருகி அருகி வருகின்றனர். தமிழில் படித்தவர்களை ஊக்குவிக்க வழங்கப்படும் சலுகைகள் தவறாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழ் வழியில் படித்தவர்கள் பள்ளியில் இருந்தே தமிழ்வழி பயின்றவர்களா? பட்டப்படிப்பு மட்டும் தமிழ் வழியில் படித்தால் போதுமா? தமிழ்நாட்டில் தமிழ் இல்லை என்றால் வேறு எந்த நாட்டில் இருக்கும்? தமிழ் வழி இட ஒதுக்கீட்டை முறைப்படுத்தும் வரை குரூப்-1 தேர்வு நடைமுறைக்கு ஏன் இடைக்கால தடை விதிக்க கூடாது?” என்று கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *