கொரோனா நிவாரண பணத்தை கொள்ளையடிக்க முயன்ற அ.தி.மு.க நிர்வாகி : மீட்டெடுத்த தி.மு.க

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின் போது தி.மு.க ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். பின்னர் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

இதையடுத்து தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தபடியே, பெருந்தொற்றில் மக்களின் வாழ்வாதாரத்திற்குத் துணை நிற்கும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கும் திட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் பதவியேற்ற நாளிலேயே அறிவித்தார். பின்னர், தமிழகம் முழுவதும் நியாய விலைக்கடைகளில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மாடல் பள்ளி சாலையில் இயங்கி வரும் ரட்லண்ட் கேட் கூட்டுறவு பண்டகசாலை நடத்தும் மூன்று நியாயவிலைக்கடைகளில் வழங்க வேண்டிய தொகையை அ.தி.மு.க பிரமுகர் காஞ்சனா என்பவர் வங்கியிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டதாக, அப்பகுதி தி.மு.க வட்டக் கழக செயலாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து தி.மு.க வட்டக்கழக செயலாளர் இது தொடர்பாக ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் நாகநாதனிடம் தெரிவித்துள்ளார். பிறகு இதுகுறித்து அவர் விசாரணை நடத்தினார்.

இதில், அ.தி.மு.க பிரமுகர் காஞ்சனா கூட்டுறவு சங்கத்தில் பொறுப்பிலிருந்தபோது தனது மகள் மற்றும் நெருங்கிய உறவினர்களைக் குறிப்பிட்ட மூன்று கடைகளில் தற்காலிகமாக பணியில் அமர்த்தி இருப்பதும், ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைகளுக்கான பணத்தை மட்டுமே வங்கியிலிருந்து எடுக்க முடியும் என மக்களை ஏமாற்றி மூன்று கடைகளில் உள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்குமான பணம் ரூ. 51 இலட்சம் வங்கியிலிருந்து மொத்தமாக எடுத்திருப்பதும் தெரிய வந்தது.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உடனடியாக இப்பிரச்சனையை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இதையடுத்து, உடனடியாக அமைச்சர் ஐ.பெரியசாமி தலையிட்டு ரூ.51 இலட்சமும் மீட்கப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டது. மேலும் இவ்விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி உத்தரவிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *