பெண் ஊடகவியலாளர்களை இணையதளத்தில் ஆபாசமாக பதிவிடுபவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம்

“ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும் நியாயமான தண்டனையே அதே போன்ற மற்றொரு குற்றம் நடைபெறாமல் தடுக்கும். ஆனால் இங்கே தமிழக காவல்துறையின் பிறழ்வும் தோல்வியுமே ஊடகவியலாளர்கள் தொடர்ந்து இந்துத்துவ வன்முறை கும்பல் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளிடம் வதைபடக் காரணமாக அமைந்துவிட்டது” என்று தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை 14 ஊடகவியலாளர்கள் கொடுத்த புகார்களில் சிலவற்றில் மட்டுமே கண்துடைப்புக்காக  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . ஒரு புகாரில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே.சாமி என்பவர்  பிணையில்  வெளியில் வந்த நிலையில் மீண்டும் பெண் ஊடகவியலாளர் குறித்து தொடர்ந்து ஆபாசமாக எழுதி வந்தார். மீண்டும் புகார் அளிக்கப்பட்ட நிலையில் எஃப்ஐஆர் பதியப்பட்டு விசாரணை வளையத்தில் இருந்தும் மீண்டும் ஒரு பெண் ஊடகவியலாளர் குறித்து ஆபாசமாக பதிவிட்டுள்ளார்.

இம்மாதிரி குற்றச் செயல்களில் ஈடுபடும்  நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தான் பொதுவெளியில் பலர் கட்டற்ற  சுதந்திரத்துடன்  பெண் ஊடகவியலாளர்கள் மீது தொடர் இணைய வன்முறையை நடத்தி வருகின்றனர்.

தற்போது இணையத்தில் (Facebook) பெண் ஊடகவியலாளர் கவின்மலர்  மீது சசிகுமார் என்பவர் அருவருக்கத்தக்க வகையில் பதிவிட்டு வருகிறார். கவின்மலரின்  புகைப்படத்தை பயன்படுத்தி “என் விலை ஆயிரம் ரூபாய்” என்று அந்நபர்  பதிவிட்டதிலிருந்து பலர் ஆபாசமான பின்னூட்டங்களை இட்டு வருகின்றனர். இதை தொடர்ந்து அவருக்கு  வேண்டாத தொலைபேசி அழைப்புகளும் வந்த வண்ணம் உள்ளன.  பலர் கண்டித்த நிலையிலும் சட்ட நடவடிக்கை பற்றிய சிறு கவலையுமின்றி அந்த இணைய குற்றவாளியின் ஆபாச பதிவுகள்  தொடர்கின்றன.

எவ்வித அச்சமும் இன்றி இவர்கள்  இணைய வன்முறையில் இறங்க துணிந்ததற்கும் அதையே முழு வேலையாகத் தொடர்வதற்கும்  காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயலற்ற நிலையே காரணம்.  கொடுக்கப்பட்ட புகார்கள் மீது பிறழ்வின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குமானால், இப்படி புதிது புதிதாக பாலியல் வக்கிர இணையக்  குற்றவாளிகள் முளைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.  கிஷோர் கே.சாமி கைது செய்யப்பட்டு சில மணிநேரங்களிலேயே விடுவிக்கப்பட்டது. ஒரு மோசமான முன்னுதாரணமாக சமூகவலைதளத்தில் ஏற்பட்டுள்ளது. யார் வேண்டுமானாலும் பெண்களை ஆபாசமாக தாக்கி பேசிவிடலாம் யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற தைரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிஷோர் கே சாமி கைது செய்யப்படுவதற்கு முன்னர் ஒரு பெண்ணை “மை டியர் ஆம்னி பஸ் ஆண்டி… நீ அடிச்சு தூக்கினாலும் சரி.. தூக்கிட்டு அடிச்சாலும் சரி.. என்னை ஒன்னும் புடுங்க முடியாது” என்று எழுதி காவல்துறை தன்னை எதுவும் செய்துவிட முடியாது என அவமானப்படுத்தினார். ஆனால் இந்த அவமானம் சமூகத்தில் இயங்கி வரும் பெண்களுக்கானது அல்ல. தனி மனிதனை குற்றமிழைக்க அனுமதித்து வேடிக்கை பார்க்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கானது. ஒரு குற்றவாளி வெளிப்படையாக சவால் விடும் அவலத்திற்கும்  தன் கையாலாகாத நிலைக்கும் அவையே வெட்கித் தலை குனிய வேண்டும்.

ஒரு குற்றத்திற்கு வழங்கப்படும் நியாயமான தண்டனையே அதே போன்ற மற்றொரு குற்றம் நடைபெறாமல் தடுக்கும். ஆனால் இங்கே தமிழக காவல்துறையின் பிறழ்வும் தோல்வியுமே ஊடகவியலாளர்கள் தொடர்ந்து இந்துத்துவ வன்முறை கும்பல் மற்றும் வலதுசாரி தீவிரவாதிகளிடம் வதைபடக் காரணமாக அமைந்துவிட்டது. இதன் வழியே  தமிழக காவல்துறை நீதியையும் நீதியின் பாலான எமது நம்பிக்கையையும் படு குழியில் தள்ளியிருக்கிறது.  இது  கெடுவாய்ப்பானது மற்றும் வெட்கக்கேடானது.

இது போல் தொடர்ந்து வக்கிர புத்தியுடன் செயல்படுபவர்கள்  மீது நடவடிக்கை எடுக்காமல்  வேடிக்கை பார்க்கும் காவல்துறையை  தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.  தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஊடகவியலாளர்களின் புகார்கள் மீது  துரித நடவடிக்கை எடுக்க காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்பதை நாங்கள் உறுதியாக வலியுறுத்துகிறோம்.”

இவ்வாறு தமிழ்நாடு பெண் ஊடகவியலாளர்கள் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *