மோடி தத்தெடுத்த கிராமத்தில் அவலத்தை வெளியிட்ட பத்திரிகையாளர் மீது உ.பி அரசு வழக்கு.

ஊரடங்கு காலத்தில் மோடியின் வாரணாசி தொகுதியில் மக்கள் உணவும் நிதியும் இல்லாமல் இன்னல்களில் உள்ளனர் என ஆதாரங்களுடன் செய்தி வெளியிட்ட ஸ்க்ரால் இதழின் சுப்ரியா சர்மா மீது உத்தரபிரதேச அரசு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 81 ஆயிரத்து கடந்துள்ளது. வைரஸால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அடிப்படையில் உலக நாடுகள் வரிசையில் இந்தியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

ஆனால் பிரதமர் மோடி இன்னமும்கூட நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததாக தெரியவில்லை. மாறாக இந்திய மக்கள் தொகை மிகுந்த நாடு என்றும் மற்ற நாடுகளோடு ஒப்பிடும்போது நம் நாட்டில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது என்றும் கூறிவருகிறார். ஆனால் அடுத்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரிக்கும் என்றும் சுகாதார வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்நிலையில் முதல்வர்களுடனான ஆலோசனையில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவை கட்டுப்படுத்தும் விடயத்தில் உலக நாடுகள் நம்மை ஆச்சரியமாக பார்க்கின்றன. பல நாடுகள் அதைப்பற்றித்தான் விவாதிக்கின்றன என்றெல்லாம் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார் என்று எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இது ஒருபுறமிருக்க ஊரடங்கு காலத்தில் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நடவடிக்கைகளை கையாள்வதிலும் மத்திய அரசு முழு தோல்வி அடைந்துள்ளது. அதுவும் பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் அரசு தனது தோல்வியை அடைந்துள்ளது. இந்த தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்தாலும் மக்கள் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமரின் சொந்தத் தொகுதியான வாரணாசியில் அவரால் தத்தெடுக்கப்பட்ட கிராமம் ஒன்றில் தோல்வியடைந்த பொது விநியோகத் திட்டத்தை மக்கள் பட்டினி கிடுக்கும் நிலை குறித்து ஸ்க்ரால் இதழின் பத்திரிக்கையாளர் சுப்ரியா சர்மா எழுதியிருந்தார்.

இதனை பொறுத்துக் கொள்ள முடியாத உத்தரப்பிரதேச அரசு அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலி புகார்களை தயார் செய்து திட்டமிட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பத்திரிக்கையாளர் சுப்ரியா சர்மா மீது யோகி ஆதித்யநாத் அரசு வழக்குப்பதிவு செய்திருப்பதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *