உயல் கல்வித்துறையில் SC/ST, முஸ்லிம்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கும் ஒன்றிய மோடி அரசு – வி.சி.க கண்டனம்


உயர் கல்வித்துறை ஆண்டறிக்கை: பாஜக ஆட்சியில் உயர் கல்வித்துறையில் எஸ்சி-எஸ்டி மக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மாபெரும் அநீதி இழைக்கப்படுவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு:
“உயர் கல்வித்துறை நிலவரம் குறித்த ஆண்டறிக்கையை இந்திய ஒன்றிய அரசு ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, 2019 -20 க்கான ஆண்டறிக்கை தற்போது வெளிவந்துள்ளது.
அதில் இடம்பெற்றுள்ள புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது உயர் கல்வித்துறை ஆசிரியர் நியமனங்களில் எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுடைய பங்கேற்பு குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
2014 – 15 ஆம் ஆண்டுக்கான அறிக்கையின்படி இந்தியாவில் மொத்தமுள்ள 14,73,255 ஆசிரியர் பணியிடங்களில் எஸ்சி பிரிவினர் 7.1 % ம், எஸ்டி பிரிவினர் 2.1 %ம் முஸ்லிம்கள் 3.2 %ம் இருப்பது தெரியவந்தது.
தற்போது வெளியாகியிருக்கும் அறிக்கையில் இந்தியா முழுவதும் உயர் கல்வித்துறையில் 15 ,03 ,156 பேர் ஆசிரியர்களாகப் பணிபுரிவது தெரிய வந்துள்ளது. அதில் எஸ்சி பிரிவினர் 9% ம், எஸ்டி பிரிவினர் 2.4%ம், முஸ்லிம்கள் 5.6%ம் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எஸ்சி பிரிவினர் 16.6 விழுக்காடும், எஸ்டி பிரிவினர் 8.6 விழுக்காடும் உள்ளன.ர் அதுபோல முஸ்லிம்கள் 14.2 விழுக்காடு உள்ளனர்.
இந்திய அளவில் எஸ்சி பிரிவினருக்கு 15 % எஸ்டி பிரிவினருக்கு 7.5 % இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியிருக்கும் ஆண்டறிக்கையில் கண்டுள்ள புள்ளி விவரங்களைப் பார்க்கும்போது, எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு உறுதியளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு உயர் கல்வித்துறையில் பெருமளவில் புறக்கணிக்கப்படுவதை அறிய முடிகிறது. இது அம்மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.
அதுபோலவே மக்கள் தொகையில் 14.2 % இருக்கும் முஸ்லிம்கள் உயர் கல்வித்துறை ஆசிரியர் பணிகளில் தமது மக்கள் தொகை விகிதத்தில் பாதி அளவு கூட பிரதிநிதித்துவத்தைப் பெற முடியவில்லை என்பது தெரிகிறது.
மத்தியில் ஆளும் பாஜக அரசு எஸ்சி-எஸ்டி மக்களுக்கும்; முஸ்லிம்களுக்கும் உரிமைகளை வழங்குவதில் அக்கறையற்ற அரசாக இருக்கிறது என்பதற்கு இந்த ஆண்டறிக்கை ஒரு சான்றாகும்.
இந்த அநீதிகளைக் களைந்து எஸ்சி, எஸ்டி மற்றும் முஸ்லிம்களுக்கு உரிய எண்ணிக்கையில் உயர் கல்வித்துறையில் பணி நியமனம் வழங்குவதற்கு சிறப்பு பணியமர்த்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென்று நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.”
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *