வெற்றி மாறனின் கருத்து மிகவும் சரியானது; இராசராசச்சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது: நடிகர் கருணாஸ் கருத்து

தமிழர் பண்பாட்டு அடையாளங்களை, தமிழர் கோயில்களை, ஊர்ப் பெயர்களை இந்தி-சமஸ்கிருத-காவி அடையாளங்களாக மாற்றுவதற்கான நுண்ணரசியல் பலகாலமாக நடைபெற்று வருகிறது. அண்மைக்காலமாக அது வேகமெடுத்துள்ளது. நாம் அதை முறியடிக்கவேண்டும். அதன் ஒரு கூறாகத்தான் ஆர்.எஸ்.எஸ். பேரணி.

இது தொடர்பாக நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்த நாள் விழாவில் பேசிய இயக்குநர் வெற்றி மாறன்,”கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். தவறினால் வெகு சீக்கரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். நமது அடையாளங்களை நம்மிடம் இருந்து தொடர்ந்து பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராசராச சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது திரைபடங்களிலும் நடக்கும்” என்று குறிப்பிட்டார்.

இராசராசச்சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. பல தேசங்களின் ஒன்றியம். பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை! அதில் ஒற்றை மதம் மட்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைக்கும் போதுதான் சிக்கல் உருவாகிறது.

அந்தக் காலத்தில் இந்து மதமே கிடையாது. சைவம், வைணவம், ஆசிவகம் என பல மதங்கள் இருந்தன. இராசராசன் சிவனை வழிபட்ட சைவர் என்பதே வரலாறு. ஆனால் இராசராச சோழனை, இராஜேந்திரசோழனை இந்து மத மன்னர்கள் என்று சொல்வது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையானது. காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள், தெய்வத்தின் குரல் நூலில், “சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை இந்து என்று ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக் கொண்டோம்” என்றார்.

ஆகவே நாம் விழிப்புணர்வு பெறவேண்டும். கலை மக்களுக்கானது. கலைப்பண்பாட்டு அடையாளங்கள் அந்தந்த மண்ணுக்குரியது. அதை மாற்ற நினைப்பதும், அதை தனதாக்கிக் கொள்ள நினைப்பதும் மானுட அறத்திற்கே எதிரானது. தமிழர் அடையாளங்களை பறிக்க நினைத்தால் தமிழர் இனம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. சரியானதை யார் பேசினாலும் அதை ஆதரிப்பது தமிழர் அறம்” இவ்வாறு நடிகர் கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *