வோடாஃபோனை விழுங்கும் ஜியோ : துணைபோகும் பாஜக அரசு..?

வோடஃபோன் நிறுவனம் திவாலாகி தனது சேவையை நிறுத்திவிட்டு, இந்தியாவிலிருந்தே வெளியேறக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். ஏஜிஆர்(AGR) எனப்படும் ஸ்பெக்ட்ரம் பயன்பாடு மற்றும் உரிமைக்காக டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு தர வேண்டிய வருவாய் பங்கீடே இந்த நட்டத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.

மத்திய கடந்த ஆறு ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவின் தவறான பொருளாதாரக் கொள்கையில் நாட்டின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் பெரும்பாலான அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மறுபுறம் நிறுவனங்கள் பலவும் சந்தித்து வரும் நட்டத்தால் மூடப்படுவதும், இதனால் லட்சக்கணக்கில் வேலையிழப்பும் ஏற்பட்டு வருகின்ற என்று புள்ளிவிவரங்களோடு பொருளாதார வல்லுநர்களும், பிரதமரின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர்களும், எதிர்கட்சியினரும் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் குறிப்பிட்ட சில நிறுவனங்களுக்கு காட்டிவரும் சலுகையால் இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் படுகுழியில் விழ்ந்து வருகின்றன என்கிற குற்றச்சாட்டும் தற்பொழுது எழுந்துள்ளது.

ஏர்டெல், வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் 92 ஆயிரம் கோடி ரூபாய் ஏஜிஆர் பாக்கி தொகையை அரசுக்கு செலுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஏற்கனவே ஜியோ நிறுவனத்தால் ஏற்கனவே கடும் நட்டத்தை சந்தித்து வந்த அந்நிறுவனங்கள் மத்திய அரசுக்கு தரவேண்டிய 92 ஆயிரம் கோடி ரூபாய் தொகையை செலுத்த முடியாமல் திணறி வந்தன.

இதுதொடர்பாக மத்திய பாஜக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசுக்கு சாதகமான தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் படி அடுத்த மாதம் 17-ஆம் தேதிக்குள் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏஜிஆர் கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும், அப்படி செலுத்தத் தவறினால் அந்த நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பார்தி ஏர்டெல், பார்தி ஹெக்ஸ்காம் மற்றும் டெலிநார் நிறுவனங்களின் சார்பாக மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாயும், வோடாபோன் – ஐடியா 3ஆயிரத்து 500 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளது.

ஆனால், மொத்தமாக 53 ஆயிரம் கோடி ரூபாயை செலுத்த வேண்டிய வோடாஃபோன் நிறுவனம், 3ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே செலுத்தியுள்ளது. மீதமுள்ள தொகையை எப்படி அந்த நிறுவனம் செலுத்தும் என்பது தெரியாத சூழலே நிலவுகிறது. வோடாஃபோன் நிறுவனத்தின் முக்கிய முதலீட்டாளர்களும் இனி எதுவும் செய்யமுடியாது எனக் கூறிவிட்டதாக தெரிகிறது.

அந்நிறுவனத்தின் சிஇஓ நிக் ரீடும், “அரசு உதவி செய்யாத பட்சத்தில் நிறுவனத்தைக் கலைப்பதைத் தவிர வேறு வழியில்லை என முன்பே தெரிவித்திருந்தார். இதுவரை அரசு உதவி என்று எதுவும் வந்ததாகத் தெரியவில்லை. வோடஃபோன் நிறுவனம் ஒரு வேளை தனது சேவையை நிறுத்திவிட்டு இந்தியாவில் இருந்து காலி செய்தால் அது இந்திய பொருளாதாரத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதற்கான காரணம் என்னவெனில், இந்தியாவின் மூன்றாவது பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக செயல்படும் வோடாஃபோன், தனது சந்தாதாரர்களுக்கு வழங்கப்படும் சேவைகளை காட்டியே எஸ்பிஐ வங்கியில் மட்டும் 12 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாக தெரிகிறது. இது தவிர பஞ்சாப் நேஷனல் பேங்க், பேங்க் ஆப் பரோடா, இந்துஸ்தான்(IndusInd) ஐசிஐசிஐ(ICICI), எச்டிஎஃப்சி(HDFC) உள்ளிட்ட வங்கிகளிடம் பெருமளவில் கடன் பெற்றுள்ளது.

இந்தச்சூழலில் வோடாஃபோன் – ஐடியா திவாலாகும் பட்சத்தில், அதன் சொத்துக்களை பறிமுதல் செய்தாலும் முழுமையான கடன் தொகைக்கு ஈடு செய்ய முடியாது என்பது எதார்த்தம். மறுபுறம் நிறுவனத்தில் பணியாற்றும் 13 ஆயிரத்து 500 ஊழியர்கள் உடனடி வேலை இழப்பார்கள். தற்போதுள்ள சூழலில் வோடபோன் திவாலானால் நிலைக்குச் சென்றால் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையும் 40 புள்ளிகள் கீழே இறங்கி செல்லும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சூழலில் 37கோடி சந்தாதாரர்களைக் கொண்ட வோடஃபோன்-ஐடியா திவாலானால், அது பலரையும் பாதிக்கும். ஏற்கனவே 15க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இருந்த தொலைத் தொடர்பு சந்தை, இன்று 4 நிறுவனங்களாகச் சுருங்கிவிட்டது. வோடாஃபோன்-ஐடியா நிறுவனமும் தனது மூட்டையைக் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டால், இரண்டே தனியார் நிறுவனங்களின் கையில் இருக்கும் சந்தையாக தொலைத்தொடர்புச் சந்தை மாறிவிடும் அபாயம் உள்ளது. இது ஆரோக்கியமான முடிவாக இருக்காது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

ஒருவேளை இரண்டு நிறுவனங்கள் மட்டும் சந்தையில் இருந்தால் தொடர்பு தொலைத்தொடர்புத் துறையில் அந்த நிறுவனங்கள் வைத்ததுதான் சட்டம்; அந்த நிறுவனம் சொல்வதுதான் கட்டணம் என்றாகிவிடும். தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஒழுங்கு படுத்தும் ட்ராய் என்ற அமைப்பே தனது செல்வாக்கை இழந்து இல்லாமல் போகும்.

தொலைத் தொடர்புத்துறையில் வேறு எந்த ஒரு வெளிநாட்டு முதலீடுகளும் இந்தியாவிற்கு வராது இது இந்தியாவிற்கு கிடைக்கும் வருவாய் வளர்ச்சியை மேலும் சிதைக்கும் இந்த நிலைக்கு ஜியோவின் அசுர வளர்ச்சியை முழு முதற்காரணம்.

மத்திய அரசின் உதவியுடன் பிரதமர் மோடியை விளம்பர மாடலாக வைத்து களமிறங்கிய ஜியோ பெருநிறுவனங்கள் அளித்துவந்த கட்டணத்தை தலைகீழாக திருப்பி போடும் அளவிற்கு கட்டணத்தை பல மடங்கு குறைத்தது.

ஜியோ சேவை பிரதமர் மோடியுடையது என்ற வகையிலேயே மறைமுகமாக விளம்பரம் செய்யப்பட்டதோடு, மத்திய பாஜக அரசுடனான உறவைப் பயன்படுத்தி ஜியோ பல கோடி ரூபாயை வங்கியில் கடன் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி தனியார் நிறுவனமான ஜியோவிற்கு வழங்கிய சிறப்பு அனுமதியை கூட மத்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-க்கு இந்த பாஜக அரசு வழங்கவில்லை எனவும், இதனாலேயே ஜியோ நிறுவனத்தின் வளர்ச்சிக்காக, பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல்-லை நட்டக்கணக்குக் காட்டி மூடுவதற்கான முயற்சியை பாஜக அரசு செய்து வருகிறது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது. ஆக, ஜியோவின் வளர்ச்சிகாக அதன் எதிர் வரிசையில் எந்த நிறுவனம் வந்தாலும் கபளீகரம் செய்யக்கூடிய சூழலே தெரிகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *