“கொரோனாவை ஒழித்த முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு


“கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசிதான். மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்குத் தேவையான தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும்” என தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ வலியுறுத்தியுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி வளாகத்தில் 120 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ எழிலன், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சிற்றரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த விழாவில் பேசிய சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், “கொரோனா பாதிப்பால் தமிழ்நாடு ஆபத்தான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஆனால் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.கவினர் சிறப்பாகப் பணியாற்றியது மட்டுமல்லாமல் மக்களின் ஒத்துழைப்பால் பாதிப்பு இப்போது வெகுவாகக் குறைந்து வருகிறது.
கொரோனாவுக்கு ஒரே தீர்வு தடுப்பூசி தான். அதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இந்தியாவில் கொரோனாவை ஒழித்த முதல் மாநிலமாக தமிழ்நாடு இருக்கவேண்டும். அதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஒன்றிய அரசு தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும். நான் எந்நேரமும் ஓடுகிறேன் உழைக்கிறென் முன்னுதாரணமாக இருக்கிறேன் என்றார்கள். நம் அனைவருக்கும் முன்னுதாரனமாக இருப்பவர் நம் முதலமைச்சர்தான்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “தேர்தல் முடிவுகள் வெளியான நாளிலிருந்து பணியாற்றத் துவங்கியவர் முதலமைச்சர். 10 ஆண்டுகள் சீர்கெட்டுப்போன நிர்வாகம் அனைத்தையும் சீர்செய்ய 5 ஆண்டுகள் தேவைப்படும் என வல்லுநர்கள் நினைத்தார்கள் அதை 35 நாட்களில் செய்து முடித்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பிரதான எதிர்கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.க, கொரோனா காலத்தில் விரல் விட்டு எண்ணும் அளவிற்குக் கூட உதவவில்லை. ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தபோது மக்களுக்காக அனுதினமும் உழைத்தவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” எனத் தெரிவித்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *